மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை யாரும் தள்ளிவிடவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓபிஎஸ் ஆதரவாளர்களான பி.ஹெச்.பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்த 27 சிசிடிவி கேமிராக்களை அகற்றச் சொன்னது யார்? எனவும் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருந்தது எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பி.ஹெச். பாண்டியனின் கருத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அதுகுறித்து, ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துள்ளதாக கூறியுள்ள சீனிவாசன், அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா மரணத்தை விமர்சிக்கின்றனர் என குறிப்பிட்டார். ஜெயலலிதாவை யாரும் தள்ளிவிடவில்லை என்றும், திமுக தூண்டுதலால் பி.ஹெச்.பாண்டியன் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார் எனவும் திண்டுக்கல் சீனிவாசன் சாடியுள்ளார். ஜெயலலிதா குறித்து பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
27 கேமராக்கள் அப்போலோவில் இருந்து அகற்றப்பட்டதா..? என்பது நிர்வாகத்திற்குட்பட்டது. அதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை தான் பி.ஹெச்.பாண்டியன் கேட்க வேண்டும் எனவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.