தமிழ்நாடு

"இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி!" - அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு

Sinekadhara

"இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதிசெய்கிறார்கள்" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் 5 மாதங்களுக்கு முன்பே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு தங்களது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருத்தாசலத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள். தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம். தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை சின்னம். எம்.ஜி.ஆரின் வாரிசு என்று யாரும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தல். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இல்லாத நிலையில் சந்திக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார்.

ஏற்கெனவே, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரு அணிகள் உருவாகி, நீதிமன்றம்வரை சென்று இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டது கடந்த கால வரலாறு. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து தற்போது அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர். இருப்பினும் அணிகள் இணைந்தாலும் மனங்கள் ஒரே நேர்கோட்டில் இணையவில்லை என்ற கருத்து தொடர்ந்து எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.