அமைச்சர் அருண் ராஜ் சோதனை pt
தமிழ்நாடு

பைக்கில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்.. நாமக்கல் மருத்துவமனையில் திடீர் பரபரப்பு!

நாமக்கல்லில் மருத்துவமனைக்கு திடீரென சென்று அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு செய்துள்ளார்.

PT WEB

தவெக அரசு பொறுப்பேற்று அமைச்சரவை பொறுப்பேற்றது முதல், அமைச்சர்கள் அடிக்கடி ஆய்வு செய்வது தொடர்ந்துவருகிறது. அந்தவகையில் அமைச்சர் அருண் ராஜ் நாமக்கல் பழைய மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார்.

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது நாமக்கல் எம்எல்ஏ திலீப்பை அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்

நாமக்கல் நகரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுவதால் பழைய மருத்துவமனை வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவாவது பழைய மருத்துவமனை வளாகத்தில் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இன்று அமைச்சர் அருண் ராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உடன் இருசக்கர வாகனத்தில் பழைய மருத்துவமனை வளாகம் முழுவதும் அவர்ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் தனியாக ஆய்வு செய்வதை அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார நல அலுவலர்கள் அவசர அவசரமாக நாமக்கல் பழைய மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்களிடம் பழைய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மட்டுமாவது செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், திருச்சி சாலைப் பகுதியில், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தில், தினசரி 30 முதல் 40 பேர் மட்டுமே சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிக அளவிலான மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மேலும் ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப் படவில்லை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் பரிசோதனைக்கு பின் கண்காணிப்படுவர் என்றும், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான போதிய அளவு தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நோய் பாதித்த நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.