தமிழ்நாடு

பாசமிகுதியால் மீனவர் என்னை தூக்கிச் சென்றார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

பாசமிகுதியால் மீனவர் என்னை தூக்கிச் சென்றார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

Sinekadhara

பாசமிகுதியால் தன்னை மீனவர் தூக்கிச் சென்று கரையில் இறக்கி விட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொள்ள வந்தபோது, படகிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச்சென்று கரை சேர்த்தார். உப்பங்கழி ஏரியில், மண் அரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, 7 பேர் பயணிக்கக்கூடிய படகில் அமைச்சருடன் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஒரு புறமாக சாயத் தொடங்கியதால் படகிலிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலரை வேறொரு படகில் ஏற்றினர். அதன் பின்னர் முகத்துவாரம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்டு படகில் இருந்து இறங்கிய அமைச்சரை, மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச்சென்று கரையில் இறக்கிவிட்டார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் விளக்கம் தெரிவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தண்ணீரில் இறங்கி நடக்கத் தயாராக இருந்ததாகவும் பாசமிகுதியால் தன்னை மீனவர் தூக்கிச்சென்று கரையில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை அந்தப் பகுதிக்கு ஆய்வுசெய்ய யாரும் வந்ததில்லை என மீனவர்கள் நன்றியுடன் கூறியதாகவும் அமைச்சர் கூறினார்.