இரு தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்து விவரங்களை 10 சார் பதிவாளர் அலுவலகங்களிடம் கேட்டு வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அளித்த சம்மன் பேரில் இருதினங்களுக்கு முன்பாக அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு சுமார் 30க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுத்து வடிவில் பெற்று கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
தனக்கும் தனது மகன்கள் நடத்தி வரும் நிறுவனத்திற்கும் தொடர்பே இல்லை என மறுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். 30க்கும் மேற்பட்ட கேள்விகளில், சுமார் 20 க்கும் அதிகமான கேள்விகளில், "எனக்கு எதுவும் தெரியாது. நியாபகமில்லை. மறந்துவிட்டேன். உதவியாளர் மற்றும் ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்" என பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். 3 வருடங்களாக அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை தர மறுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
கடந்த 2001 - 2006 அதிமுக.,வில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டஏழு நபர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடராக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
பின்னர் இந்த வழக்கு கடந்த 2020 ம் ஆண்டு அமலாக்கத்துறைக்கு மாறியது. இந்த நிலையில், இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என கடந்த 2022 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை, அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிற நபர்கள் குறித்த சொத்து விவரங்கள் கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடிதம் எழுதி சொத்து விவரங்களை பெற்றனர். தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் ஊள்ளிட்ட இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள், மதுரையில் தல்லாகுளம் உள்ளிட்ட 2 சார் பதிவாளர் அலுவலகங்கள், சென்னையில் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட மூன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் என 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற்றனர். இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்தனர்.
சில தினங்களுக்கு முன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணையானது நடைபெற்றது. மேலும், 30-க்கும் மேற்பட்ட எழுத்து வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டு, எழுத்து வடிவில் பதில்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் எழுத்து வடிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பதில்கள் குறித்தான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி பத்மநாப மங்கலம் பகுதியில் இயங்கி வரும் சிவா ப்ளூ மெட்டல்ஸ் என்ற கனிம வள நிறுவனம் 2005-06 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு கூட்டாண்மை நிறுவனமாகும். தனது மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ஆனந்த பத்மநாபன் ஆகிய மூன்று பேர் உட்பட ஆறு நபர்கள் இணைந்து அந்த நிறுவனத்தை தொடங்கியதாகவும் தற்போது அந்த நிறுவனம் எந்த நிலையில் உள்ளது? என்ன நடக்கிறது? பொறுப்பில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது எனவும், தனக்கும் அந்த நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் எழுத்து வடிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதே நிறுவனம் தொடங்கியபோது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூபாய் 5 லட்சம் காசோலையாக வழங்கியதையும் பின் அதே நிறுவனத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன்-க்கு காசோலையாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், இந்த பணம் இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயகாந்தியின் வங்கி கணக்கு மூலமாக மீண்டும் சிவா ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 07.08.2019 முதல் 25.09.2019 வரை சுமார் 1.5 மாத காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் IOB வங்கி கணக்கிற்கு ரூ. 41லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் மிக குறுகிய காலத்தில் அவரது மனைவி ஜெயகாந்தி வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை ஆகியுள்ளதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்த கேள்விகளுக்கு., "தனக்கு எதுவும் தெரியாது, தனது ஆடிட்டரை கலந்தாலோசிக்க வேண்டும்" என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குதிரை மொழி கிராமத்தில் 2.45 ஏக்கரில் உள்ள நிலம், மதுரை எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள சொகுசு வீடு, மதுரை காமராஜர் பிரதான சாலையில் உள்ள சொத்துக்கள் ஆகிய சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் இரண்டு ஆண்டுகளாக கேட்டும் அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பிக்காதது ஏன்? என்ற கேள்விக்கு, "தனக்கு சரியாக ஞாபகம் இல்லை. தனது உதவியாளர் மற்றும் ஆடிட்டர் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்த பிறகு அலுவலகத்தில் சமர்ப்பிக்கிறேன்" என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை மதுரை துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை சென்னை துணை இயக்குநர் அலுவலகம் ஆகியோர் கேட்ட அசையும், அசையா சொத்து விவரங்கள் தேர்தல் பிரமாண பத்திரம், பங்குதாரராக பதவி வகித்த நிதி நிறுவனங்கள், காப்பீட்டு கொள்கைகளில் முதலீடு, கை துப்பாக்கி வாங்கியதற்கான ஆவணங்கள் ஆகிய எதுவுமே 3 ஆண்டுகளாகியும் தற்போது வரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை அனிதா ராதாகிருஷ்ணன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்காததாலும் ஆவணங்கள் கடந்த 3 ஆண்டுகளாக சமர்ப்பிக்காததாலும் சமீபத்தில் 10 சார் பதிவாளர் அலுவலகங்களிடம் இருந்து பெறப்பட்ட அவரின் சொத்து விவரங்கள் கணக்கெடுப்பு செய்து அதன் மூலம் அவரது சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.