அதிகாலையில் தாய் இறந்த சோகத்தை மனதில் பூட்டி விட்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.
வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்த சுபலட்சுமிக்கு 2 பிள்ளைகள் . கணவர் கிருஷ்ண மூர்த்தி ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில் இதயநோயுடன் போராடியவாறே தன் பிள்ளைகளை வளர்த்து வந்த சுபலட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் அருகே உள்ள கன்கார்டியா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் சுபலட்சுமியின் மகன் சுனில் குமார் தாய் இறந்த துக்கத்திலும் தமிழ்த் தேர்வை எழுதினார். தேர்வை முடித்து விட்டு வந்த சுனில் குமார், தாயின் காலில் விழுந்து வணங்கியபின் கண்ணீர் விட்டு கதறிய காட்சி மனதை உலுக்கியது.
தந்தையும் தாயும் இன்றி தவிக்கும் சுனில் குமாருக்கும், யுவாசினிக்கும் அரசு உதவ வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவல், சுனில்குமாரிடம் பேசியதாகவும், சகோதரனாக துன்பத்தை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.