தமிழ்நாடு

புளியந்தோப்பில் கட்டடத்தை சரிசெய்ய நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

PT WEB

சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கேபி பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டடம் தரமற்று இருப்பது தொடர்பாக புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, கட்டடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி.க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய தலைமுறையிடம் உறுதியளித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு கேசவபிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் சில ஆண்டுகளுக்கு முன் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. முதல் கட்டத்தில் 864 வீடுகளும், இரண்டாம் கட்டத்தில் 1056 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பயனாளிகள் அங்கு குடியேறி இரண்டு, மூன்று மாதங்களாகின்றன. அதற்குள் கட்டடத்தை தொட்டாலே சிமென்ட் பூச்சுகள் உதிரும் நிலையில் இருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரிய வந்தது.

இது தொடர்பாக செய்தி வெளியானதையடுத்து, சுவர்களுக்கு சிமென்ட் பூசி சீரமைக்கும் தற்காலிக நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். சுவர்களுக்கு வெறும் பூச்சு மட்டுமல்லாது, குடியிருப்பின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கட்டடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய தலைமுறையின் கள ஆய்வுக்குப் பின், தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்துள்ளார்.