தமிழ்நாடு

சேலம்: ஏரிகளில் இறந்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

நிவேதா ஜெகராஜா

தலைவாசல் அருகே அடுத்தடுத்து 2 ஏரிகளில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றது. மீன்கள் இறப்பால் துர்நாற்றம் வீசுவதோடு கால்நடைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. அதனருகே 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இரு ஏரிகளுக்கு வசிஷ்ட நதியில் இருந்து நீர்வரத்து உள்ளது.

இந்நிலையில் இரு ஏரிகளிலும் திடீரென லட்சக்கணக்கான மீன்கள் நேற்று முதல் இறந்து மிதக்கின்றது. இதனால் அவ்வழியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழலும் நிலவுகிறது. மணிவிழுந்தான் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சேகோ ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மீன்கள் இறந்தனவா அல்லது வெயில் தாகத்தினால் இறந்தனவா என பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.