தமிழ்நாடு

கஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்

கஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்

webteam

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை சரணாலயலப் பகுதியில் கஜா புயலுக்கு பின் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் ‘பறவைகள் சரணாலயம்’ சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவிற்காகவும் அங்குள்ள பறவைகள், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை நாடி வருகின்றன. ஆண்டு தோறும் சீசன் காலங்களில் இந்த சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 4 அடி உயரமுள்ள நாரை உள்பட பல்வேறு இன பறவைகள் வந்து செல்கின்றன. 


இந்நிலையில் கஜா புயலினால் தாக்கத்தால் கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் பாதிக்கப்பட்டது சூறைக் காற்றால் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிமாக பறவைகளும் ஆங்காங்கே இறந்த காணப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஆர்டிக் பரதேசம், சைபீரியா, ஆஸ்திரேலியா மியன்மார், இலங்கை, இமயமலை சாரல் பகுதிகள்  பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ, கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டி மூக்குநாரை, சிவப்புகால் உள்ளான், செங்கால்நாரை வரித்தலை வாத்து, ஊசிவால் சிறவி, கடல்காகம், கடல்ஆலா என 30-க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. 

இதையடுத்து பறவைகளை காண இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் வரத்தொடங்கி உள்ளனர். கோடியக்காடு பம்ப்ஹவுஸ் பகுதியிலிருந்து பறவைகள் செல்லும் பாதை புயலுக்கு முன்னரே சேதமடைந்த நிலையில், தற்போது நடந்து செல்லமுடியாத அளவிற்கு சேரும் சகதியுமாக உள்ளது. பறவைகள் வெகு தூரத்தில் காணப்படுவதால் அவற்றை காணமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். எனவே வனத்துறையில் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக பாதையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்