தமிழ்நாடு

தனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்

webteam

வீடு வசதியில்லாததால் வெளிமாநிலத்தவர்கள் மரக்கிளைகளில் கட்டில்கள், பலகைகளால் படுக்கையமைத்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1000-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியேற மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது மட்டுமல்லாமல் கைவிடப்பட்ட ஆதரவற்றோர்கள், முதியவர்கள் ஆகியோர் ஆங்காங்கே இருக்கும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வேலை இல்லாத காரணத்தால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்த கூலித்தொழிலாளிகள் ஊர் திரும்பியுள்ளனர். 
அந்தவகையில் சென்னையில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட கூலி வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

பலராம்பூரைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சென்னையிலிருந்து சென்றதால் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ற வகையில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாததால், மரக்கிளைகளில் கட்டில்கள், பலகைகளால் படுக்கையமைத்து தங்கியுள்ளனர். யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட படுக்கைகளில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.