போரூர் சிறுமி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் தஷ்வந்தின் தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த பாபுவின் 6 வயது மகள், 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதன்படி தஷ்வந்த்திற்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.