தமிழ்நாடு

ஓபிஎஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது? - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Sinekadhara

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூலை 15ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ‘’முன்னாள் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 15ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். நலமுடன் உள்ள அவர் நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி தற்போது சிகிச்சை எடுத்துவருகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஓபிஎஸ் உடல்நிலை குறித்து கோவை செல்வராஜ் கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் காய்ச்சல், சலி இருந்து அதனால் மருத்துவர்கள் ஆலோசனை படி இருந்து வருகிறார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு உள்ளது அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது” என தெரிவித்தார்.

கடந்த 12ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது ஓபிஎஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.