தமிழ்நாடு

அக்.2ல் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவு

அக்.2ல் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவு

webteam

சம்பா சாகுபடிக்காக, அக்டோபர் 2ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால், குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 41 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சம்பா தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். 
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், பரவலாக பெய்துவரும் மழையை கருத்தில்கொண்டும், வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் பெருமக்களின் நலனை கருத்தில்கொண்டு இடுபொருள் மானியமாக 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சம்பா சாகுபடி தொகுப்புத் திட்டத்தில், விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்கான தரிசு உழவுப் பணிக்கு மானியமாக ஏக்கருக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற கிலோ ஒன்றுக்கு மானியமாக 10 ரூபாய் வழங்கப்படும் என்றும், களைக்கொல்லி மருந்து தெளிக்க ஏக்கருக்கு 280 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய, குறுகிய கால நெல் ரகங்களை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்க அறிவுரை வழங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பா சாகுபடி பணியை தொடங்கும்போது புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, தரமான விதைகள், ரசாயன உரம், உயிர் உரம், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் விவசாயிகளை முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.