தமிழ்நாடு

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..!

webteam

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. 5 வருடத்திற்கு பின் கடந்த மாதம் மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 39 ஆம் ஆண்டில் 2 வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தற்போது நீர் இருப்பு 93.4 டிஎம்சியாகவும் உள்ளது.

கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,40,000 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்து வந்தது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றிரவு முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அதன் முழு கொள்ளளவான 120 அடியை (93.4 டிஎம்சி) எட்டியுள்ளது. இதற்கு முன்னதாகவே மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 23 தேதி முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியில் இருந்து படிப்படியாக 1,40,000 கன அடியாக உயர்த்தப்படும் என தெரிகிறது. அணைக்கு நீர்வரத்து சுமார் 1,20,000 கனஅடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.4 டிஎம்சியாகவும் உள்ளது. இதனையெடுத்து அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் காவிரி கரையோர கிராமங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேட்டூர் அணைக்கு வரும் அதிகப்படியான நீர்வரத்தால் சேலம் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.