சூப்பர் எல்-நினோ காரணமாக தென்மேற்குப் பருவமழை ஏமாற்றியதாலும், கர்நாடகத்துடன் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை நீடிப்பதாலும், வழக்கமான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை. 93 ஆண்டு வரலாற்றில் மேட்டூரில் இருந்து தாமதமாக நீர் திறக்கப்படுவது இது 63ஆவது முறையாகும். இந்நிலையில், ஏற்கெனவே குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியிருந்தாலும், நீர்வரத்து திருப்திகரமாக இல்லை. மொத்தக் கொள்ளளவான 120 அடியில் தற்போது 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனால், சம்பா, தாளடி சாகுபடிக்கு சுமார் 205 டிஎம்சி தேவைப்படுகிறது. தொடக்கப் பணிகளுக்கு 20 டிஎம்சி வரை திறக்கப்படலாம் என்றாலும், முழுமையான சாகுபடிக்கு இந்த இருப்பு போதாது.
விவசாயிகளுடன் தமிழக அரசு எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக நீர்த்திறப்பை அறிவித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எந்தப் பயிரை சாகுபடி செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல் இன்றி நீர் திறந்தால் பயன் தராது. திறக்கப்படும் நீர் முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் டெல்டா விவசாயம் பாதிப்படைவதுடன், எதிர்வரும் கோடையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.