தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து இந்தாண்டும் ஜுன் 12-ல் தண்ணீர் திறப்பு இல்லை !

மேட்டூர் அணையில் இருந்து இந்தாண்டும் ஜுன் 12-ல் தண்ணீர் திறப்பு இல்லை !

Rasus

குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள பராம்பரியமாக மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனிடையே தொடர்ச்சியாக 8-ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. அணையில் 85 முதல் 90 டிஎம்சி அளவிலான தண்ணீர் இருந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட முடியும் என்ற நிலையில், தற்போது அணையின் நீர்மட்டும் வெகுகுறைவாக (48.29 டிஎம்சி) குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக கர்நாடகா பொதுப்பணித் துறை அமைச்சரான ஹெச்டி ரெவண்ணா, கடந்த திங்கள்கிழமை கும்பகோணத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை இருந்தால் கர்நாடகா, தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்துவிடும் எனக் கூறினார். ஆனால் தற்போது கர்நாடகா நீர்தேக்கங்களிலும் போதிய நீர் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே காவிரி நதிநீர்‌ மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. அதனைத்தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இம்மாதம் 28-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.