மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமையாளர் சிவசுப்பிரமணியத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் வசித்த 17 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த 3-ஆம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததாக குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டார். இந்நிலையில் இன்று சிவசுப்பிரமணியத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மதுரையில் தங்கியிருந்து மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.