தமிழ்நாடு

'இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைதுதான்' – சென்னை கமிஷனர் எச்சரிக்கை

JustinDurai

மாணவர்கள் இனிமேலும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பல்பொருள் அங்காடியின் விரிவாக்கப்பட்ட புதிய சுய சேவை பிரிவை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த அங்காடியில் ஏற்கனவே காவலர்களுக்கான வரி விலக்குடன் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முதல் மாடியில், இன்று புதிதாக சுய சேவை பிரிவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர்,

அதன் பின்னர் மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, ''56 லட்சம் ரூபாய் செலவில் இந்த பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டது. ஆயுதப்படையில் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன். என் தந்தை ராணுவத்தில் இருந்த போது மதுவை வாங்கி விற்பனை செய்து என்னை படிக்க வைத்தார். காவல்துறை பணி என்பது கடுமையான பணி. காவலர் குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற பல்பொருள் அங்காடியை திறந்துள்ளனர்.

காவலருக்கு பெரிய பிரச்சனை ஓய்வு. தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என அறிவித்தார். ஆண்டுக்கு 250 காவலர்கள் மரணம் அடைகின்றனர். இதில் குறிப்பாக 50 காவலர்கள் சாலை விபத்தில், 50 காவலர்கள் தற்கொலை செய்தும், மற்றவர்கள் ரம்மி போன்ற சூதாட்டத்தை விளையாடி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் கிரிப்டோகரன்சி போன்ற விளையாட்டுகளில் முறைகேடு நடைபெறுகிறது. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆன்லைன், ரம்மி பிட்காயின், கிரிப்டோகரன்சி உள்ளிட்டவை நடைபெறும் மோசடிகளை விசாரிக்கும் பொறுப்பிலுள்ள காவலர்கள் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது. காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், இதற்காக சிறப்பு பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் நிதி ஒதுக்குவதாக கூறினார்'' என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,'' கல்லூரி மாணவர்களின் பிரச்னை தற்போது பெரிதாக உள்ளது.ரூட்டு தல பிரச்சினை, மாணவர்களுக்கு இடையேயான மோதல்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இதில் குறிப்பிட்டு நேற்று மட்டும் மூன்று சம்பவங்கள் நடைபெற்றது.

மாணவர்கள் பஸ்சில் தொங்கி கொண்டு வருவதையும் பொது மக்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, அவர்களின் கல்லூரிக்குச் சென்று கல்லூரி பேராசிரியருடன் மாணவர்களை வைத்து அறிவுரை கூறி வந்தோம். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த சம்பவத்தில் 10 மாணவர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பள்ளி கல்லூரிகளில் உயர்கல்வி துறை மூலமாக பள்ளி திறந்தவுடன் முதல் ஒரு வாரத்திற்கு இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது காவல்துறை. ஆனால் தொடர்ந்து மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களை காவலர்கள் தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது. டிஜிபி கூறியதுபோல காவலர்களுக்கு பொதுமக்களிடம் ஒழுக்கமாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபடல் இருப்பது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: செல்போன் திருடனை துரத்திச் சென்ற ஆசிரியர் - ரயில் மோதி உயிரிழப்பு