தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தாக்கல் செய்து உரையாற்றினார். அந்த உரையின் ஒருபகுதியாக, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிக்கை தயாரிப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார், மதுரை மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.
தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தற்போது சென்னையில் 2 வழிப் பாதைகளில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக சென்னையில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையை போன்று தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், 'மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.