வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. பல இடங்களில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகவும், மேற்கு திசையில் இருந்து வீசிய காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் மற்றும் எண்ணூரில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. பூந்தமல்லியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.