தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் PT Web
தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுகுறையும் எனவும், ஆனால் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாகவும் தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

வங்கக்கடலில் நவம்பர் மாதம் இறுதியில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பல்வேறு உயிர்களும் பலியாகின.

ஃபெஞ்சல் புயல்

இந்நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவில் வலுகுறையும் என்றும், ஆனால் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்..

இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேசுகையில், "இதுவரை எப்போதும் இல்லாதவகையில் வடகிழக்கு பருவமழை 16% அதிகமான மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செமீ மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்" எனவும் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

மேலும் "புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி விரைவில் வலுகுறையும் என்றும், ஆனால் டிசம்பர் 15-ம் தேதி அந்தமான் கடல்பகுதியை ஒட்டி மேலும் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்" என்றும் கூறினார்.

ஃபெஞ்சல் புயலை சரியாக கணிக்க முடியாதது குறித்து பேசிய அவர், "ஃபெஞ்சல் புயலின் திசையை சரியாக கணித்தோம், ஆனால் அதன் திறனை கணிப்பதில் தவறு ஏற்பட்டது. இது நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள வானிலை கணிப்பிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.