வெப்பம் சார்ந்த நோய்கள் குறித்து சுகாதாரத் துறை வழிகாட்டுதல் அறிக்கை வெளியீடு pt web
தமிழ்நாடு

4 நாட்களில் வெப்பநிலை அதிகமாகும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 3ஆம் தேதிவரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

தமிழகத்தில் வெப்பநிலை பிப்ரவரி 3ஆம் தேதி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால், சுகாதாரத்துறை தண்ணீர் பருகவும், குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அதிக கவனம் தேவை.

மழைக்காலம், குளிர்காலம் முடிவடைந்து தற்போது கோடைக்காலத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளாகவே வெப்பநிலை உயர்வின் தாக்கத்தை தற்போதே மக்கள் உணரத்தொடங்கிவிட்டனர்.

வெப்பநிலை

வெப்பநிலை அதிகரிப்பால் வெப்ப நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக எச்சரித்திருக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை, தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும், அருகிலுள்ள குளிர்ந்த அல்லது நிழலான பகுதிக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும்., குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும், கால் தசைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால், நோயாளி மயக்க நிலைக்குச் சென்றால், உடல் வெப்பநிலை 104°Fக்கு மேல் தொடர்ந்து இருந்தால் தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் எண்ணையோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லவும், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் என்பதால் கூடுதல் கவனம் தேவை எனவும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தசூழலில் வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை பிப்ரவரி 3ஆம் தேதிவரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயர வாய்ப்பு..

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெப்பம்

மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 5ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.