ஃபானி புயல் காரணமாக வட தமிழகத்தில் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 870 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், நாளை வடதமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலானது நாளை சென்னைக்கு கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் அதிதீவிர புயலாக மாறி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நாளை காலை 60 கிலோ மீட்டர் வரையிலும், நாளை மாலை 70 கிலோ மீட்டர் வரையிலுமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.