தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை தொடரும்!

Sinekadhara

தென்மேற்குவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தற்போது எழும்பூர், அண்ணா சாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கோயம்பேடு, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம் மேற்கு மாம்பலம் அண்ணா நகர் கோட்டூர்புரம் திருவல்லிக்கேணி பெரம்பூர் துரைப்பாக்கம் பெருங்குடி ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. 

அதேபோல் சென்னையை ஒட்டியுள்ள பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது. புறநகர் பகுதிகளான புழல், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(11-11-22)  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்று மணி நேரத்திற்கு (10-11-2022 இரவு 7 மணி நிலவரப்படி) இடியுடன் கூடிய மழை சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.