தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கோடைக்காலம் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. சென்னையில் கடந்த 5 நாட்களில் 3 முறை மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
வானம் முழுஅளவில் மேகமூட்டமாக காணப்படுகிறது. தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக வடக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்வதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,
வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேப்பூர் 6 செ.மீ,
கோத்தகிரி, சேலம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 3 செ.மீ மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.