மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல், வடதமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை பெய்துள்ள மழையின் அளவு 39 சென்டி மீட்டர் என்றும் இது வழக்கத்தை விட 31 சதவிகிதம் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.