தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: விற்பனை பாதிப்பதாக வியாபாரிகள் கவலை

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: விற்பனை பாதிப்பதாக வியாபாரிகள் கவலை

Sinekadhara

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. நண்பகலுடன் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் மூடப்பட்டன. இதனால் வியாபாரம் பாதிப்பதாக கடை உரிமையளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக , இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படவில்லை.

காய்கறி, மளிகை ஆகிய கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டன. இதேபோல் தேநீர் கடைகளிலும் நண்பகல் 12 மணி வரை பார்சலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்கப்படுகிறது. பார்சல் வாங்கச் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமலுக்கு வந்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகளால் வியாபாரம் மிகவும் பாதிக்கும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

புதிய கட்டுப்பாடுகளால் காய்கறி சந்தையில் மக்களின் வருகை குறைந்தது. வழக்கத்தை விட குறைவான மக்களே காய்கறி வாங்க வந்தனர். புதிய கட்டுப்பாடுகளால் விற்பனை குறைவு என கவலை தெரிவித்த வியாபாரிகள், காய்கறி சந்தை நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் தீவிரம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தினர்.

முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை

இதனிடையே, மளிகைக் கடைகளைப் போல நண்பகல் 12 மணிவரை சலூன்களை திறந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என வேதாரண்யம் பகுதி முடிதிருத்தும் பணியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள அவர்கள், மாதம் 20ஆயிரம் ரூபாயை உதவித் தொகையாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

டாஸ்மாக்...

டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்ற கட்டுப்பாடு இன்று அமலுக்கு வந்தது. இதனால், பல இடங்களில் நண்பகல் 12 மணி வரை கூட்டம் அலைமோதின.