தமிழ்நாடு

அரியலூர்: மனநலம் பாதித்த இளைஞரை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த மருத்துவர்!

webteam

அரியலூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ வழியாக 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது 24 வயதான மகன் ஞானசுந்தர் என்பவர் சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவரை அவரது பெற்றோர்கள் மற்றும் காவல் துறையினரும் தேடி வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் சித்த மருத்துவர் சரவணகொண்டாரம், கர்நாடக மாநில எல்லை பகுதியில் மூலிகை செடிக்காக சென்றுள்ளார். அப்போது அந்த வனப்பகுதியில் ஆடைகள் இல்லாமல் ஒரு இளைஞர் சுற்றிதிரிவதை கவனித்துள்ளார். அந்த இளைஞனை விசாரித்ததில் அவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே அந்த இளைஞனை பற்றின வீடியோவை எடுத்து அதை அனைவருக்கும் பகிர்ந்துள்ளார் சரவண கொண்டாரம். அந்த வீடியோவில் அந்த இளைஞன் எந்த ஊர், எந்த பகுதி, அம்மாவின் செல்போன் எண் ஆகியவற்றை கேட்டு பதிவு செய்துள்ளார். அவர் தான் ஜெயங்கொண்டாரத்தை சேர்ந்தவரென கூறியுள்ளார்.

நான்கு மாதங்களாக தேடப்பட்டு வந்த ஞானசுந்தர், கர்நாடக மாநில எல்லை ஈரோடு அருகே சுற்றி திரிகிறார் என்ற தகவலை வாட்ஸ் அப் வீடியோ வாயிலாக பெற்ற ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீடியோவை பதிவு செய்த திருப்பூர் சித்த மருத்துவர் சரவண கொண்டாரம் மூலம் அந்த இளைஞரின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவரை மீட்டுள்ளனர். தொடர்ந்து இளைஞரை ஜெயங்கொண்டதிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் சிகிச்சைக்காக காவல் ஆய்வாளர் சுமதி உதவியுடன் விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார்.

மகனை கண்டுபிடிக்க உதவிய சித்த மருத்துவர் சரவண கொண்டாரம் மற்றும் காவல்துறையினரை இந்த துரித செயல், பெற்றோருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.