தமிழ்நாடு

பாலியல் கொடுமைக்கு நீதிக்கேட்டு பெண் தீக்குளிப்பு!

பாலியல் கொடுமைக்கு நீதிக்கேட்டு பெண் தீக்குளிப்பு!

webteam

விருதுநகரில் பாலியல் கொடுமைக்கு நீதி கிடைக்காததால் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியாபட்டியை சேர்ந்த ஆனந்தராஜ், வசந்தி தம்பதியினரின் மகள் செல்வி. 27 வயது நிரம்பிய இப்பெண் மனநலம் பாதிப்படைந்தவர் என கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை, அதேபகுதியை சேர்ந்த ஏனர்சாமி என்ற சுமைத்தூக்கும் தொழிலாளர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து செல்வி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ஏனர்சாமியை பிடித்து அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த செல்வியின் பெற்றோர் மற்றும் சகோதரர் ஏனர்சாமியை தாக்கியுள்ளனர். 

இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீஸார் ஏனர்சாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து செல்வியின் குடும்பத்தார் ஏனர்சாமி மீது புகார் அளித்துள்ளனர். ஆனால் செல்வியின் குடும்பத்தார் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார், மாற்றாக ஏனர்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் செல்வி குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் செல்வி குடும்பத்தார் 4 பேரும் ஜாமீன் பெற்று காவல்நிலையத்தில் கையொப்பமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கு நீதி கிடைக்காததால் மனமுடைந்த செல்வி, நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்தச் சம்பவத்தையடுத்து ஏனர்சாமி கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.