மேகதாது விசயத்தில் தமிழக பாஜக துணை நிற்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதனிடையே, நியாயமான விசயங்களுக்கு துணை நின்றால் நன்றி என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, காமராஜர் நூற்றாண்டு மணி மண்டபத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு தமிழக பாஜக துணை நிற்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு...
“நியாயமான விசயங்களுக்கு துணை நின்றால் நன்றி” எனக் கூறியவரிடம் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு
“ நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டது. அதற்கான சட்டப் போராட்டத்தை அதிமுக-வினர் சரியாக கையாளாமல் மாணவர்களை பிரச்னையில் நிறுத்தி இருக்கிறார்கள. அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையோடு ஒரு குழுவை அமைத்து அதை சரியாக செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார்" எனக் கூறினார்.