தமிழ்நாடு

கஜா புயலில் பிறந்த ’கஜஸ்ரீ’- டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்

webteam

’கஜா’ புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ’கஜஸ்ரீ’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்தியில் அமீர்கான் நடிப்பில் ’3 இடியட்ஸ்’ மற்றும் தமிழில் விஜய் நடிப்பில் ’நண்பன்’ படங்களில் ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில், இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படும். மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அந்த பெண்ணுக்கு விஜய் பிரசவம் பார்ப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கும். 

அந்த பாணியில் நாகப்பட்டினத்தில் கஜா புயலின் போது பெண்ணுக்கு பிரவசம் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் பிரசவம் டார்ச் வெளிச்சத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நாகை - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையை கடந்தது. இதனால் நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் பலரும் தமது வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். 

தெண்ணை, வாழை உள்ளிட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. பல மின்கம்பங்களும் சாய்ந்து ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் நாகை உள்ளிட்ட புயல் பாதிப்பு மாவங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ’கஜா’ புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது.

நாகப்பட்டினம் தெற்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மஞ்சுளா. இவர் கஜா புயல் அறிவிப்பின் போது பிரசவத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து மஞ்சுளா கடந்த வியாழன் கிழமை தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. 

அடுத்த நாள் மஞ்சுளாவிற்கு பிரசவ வலி ஏற்படவே வேறு வழி இல்லாமல் மருத்துவர் டார்ச் மற்றும் மொபைல் போன் வெளிச்சத்தில் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது, மஞ்சுளாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு ’கஜஸ்ரீ’ என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். 

இதுகுறித்து மஞ்சுளா கூறுகையில், ”மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கடுமையாக மழை பெய்தது. மருத்துவமனையில் ஜன்னல் வழியாக மழை நீர் உள்ளே புகுந்தது. மின் இணைப்பு இல்லாததால் கடும் இருட்டாக இருந்தது. இதனால் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அவர்களுக்கு நன்றி” என தெரிவித்தார். 

மஞ்சுளாவிற்கு ஏற்கனவே 2 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருப்பதும் அந்த பெண்ணும் இதே ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பிறந்தார் எனவும் மஞ்சுளாவின் கணவர் ரமேஷ் தெரிவித்தார்.