தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி: மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு வாபஸ்

தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி: மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு வாபஸ்

கலிலுல்லா

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால்தான் அனுமதி என்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் புனித யாத்திரை செல்லும் வழியில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் வந்து செல்கின்றனர். மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருந்தார்.

இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரவிருப்பதாகவும், எனவே மீனாட்சியம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான நகல், அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்த சான்றிதழ் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.