ஈரோடு பெருந்துறை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

ஈரோடு | விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. தயார் நிலையில் மருத்துவ வசதி!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப மருத்துவர்கள் செவிலியர் முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

Prakash J

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப மருத்துவர்கள் செவிலியர் முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வின்போது, கூட்டநெரிசலில் சிக்கி 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு மாத காலம் அமைதியாக இருந்த தவெக, மீண்டும் சேலத்தில் இம்மாத தொடக்கத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டது. ஆனால், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் கடந்த நவ. 23ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்தினார் விஜய். அங்கு என்.ஆர்.காங்கிரஸை விமர்சிக்காமல் கூட்டணியில் இருக்கும் பாஜகவை மட்டும் விமர்சித்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் இன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

தவெக தலைவர் விஜய்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபிறகு, தனது தொகுதியின் பலத்தைக் காட்டும் விதத்தில் இச்சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கரூர் சம்பவத்துக்குப் பின் நடைபெறும் பரப்பரை கூட்டம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வந்தபடி உள்ளனர். பிரசார கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் சிகிக்சை அளிக்க கூட்டம் நடக்கும் மைதான முகாமில் 58 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர், 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக உள்ளன. மேலும் பிரசார கூட்டத்துக்கு அருகாமையில் உள்ள பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கல்லூரியில் அவசர கால சிகிச்சை அளிப்பதற்காக 50 படுக்கை வசதிகள், அதற்கேற்ப மருத்துவர்கள், செலிவியர்கள், எஸ்க்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் செய்ய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரத்த வகை பிரிவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்துக்கு பின் நடைபெறும் தவெக பிரசார கூட்டம் என்பதால் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் முன்னேற்பாடாக செய்யப்பட்டுள்ளன.