சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே நகரில் மத்திய பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் வரதராஜூ. விமான நிலையத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சக்தி பிரியா (20) என்பவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நன்றாக படித்துவந்த சக்தி பிரியா சில நாட்களாக படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தற்கொலைசெய்ய முயன்றிருக்கிறார். ஆனால் பெற்றோர் அவரைக் காப்பாற்றி ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வரதராஜூவும் அவரது மனைவியும் புதுத் துணி எடுப்பதற்காக வண்ணாரப்பேட்டை சென்றுள்ளனர். அங்கு சென்றபிறகு சக்தி பிரியாவுக்கு தந்தை போன் செய்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்து பார்த்திருக்கின்றனர். அங்கு சக்தி பிரியா தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்தி பிரியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த கே.கே நகர் போலீசார் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.