ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஜோத்பூர் விரைவு ரயிலில் கெட்டுப்போன இறைச்சி கொண்டுவரப்பட்ட விவகாரத்தில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஜோத்பூரில் இருந்து விரைவு ரயிலில் கொண்டுவரப்பட்ட 2 டன் கெட்டுப்போன இறைச்சி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மீன் என பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஆட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்புப்படையினர், ஜெய்கணேஸ், ஜெய்சங்கர் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்திருந்தனர்.
மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜோத்பூர் விரைந்தனர். அங்கு சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இம்ரான்கான், முன்னா குரேஷி ஆகியோரை கைது செய்த காவலர்கள் சென்னை அழைத்து வந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, கெட்டுப்போன இறைச்சிகளை வாங்கியதாக சென்னையில் உஸ்மான் பாஷா என்பவரையும் ரயில்வே பாதுகாப்புப்படை கைது செய்துள்ளனர்.
முன்னதாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி என்ற சர்ச்சை நிலவியது. இதனையடுத்து சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வில் அது ஆட்டு இறைச்சிதான் என்பது தெரியவந்தது.