புதிய தலைமுறை மற்றும் அமீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் வைகோ தலைமையில் மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைமுறை மற்றும் அமீர் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டல் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீர்மானத்தில், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் அரசு ஆத்திரம் கொண்டுள்ளது. மக்கள் வெறுப்புக்கு ஆளாகி வருவதால் ஆத்திரத்தில் நிதானத்தை இழந்துள்ள தமிழக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுக தொலைக்காட்சிக்கும் ஓராண்டு காலம் அரசுகேபிளில் இடம் கொடுக்கப்படவே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினரின் வழக்குப்பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 124-வது இடத்தில் இருந்த புதிய தலைமுறை 499-வது இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி சேனல் வரிசையில் இருந்த புதிய தலைமுறை பிறமொழி சேனல் வரிசையில் பின்னுக்கும் தள்ளப்பட்டுள்ளது.