தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் வைகோவின் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்தகொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியனவும் களத்தில் உள்ளன. இதையடுத்து நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எல்லாக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் நேர்காணல், பிரசாரம் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரிப்பதில் மாநில தலைமைக் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இதை முதலில் தொடங்கிய திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதற்கு முன்பாக, இந்திய யூனியம் முஸ்லீம் லீக் கட்சி (IUML) மற்றும் மனித நேய மக்கள் கட்சி (MMK) ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் வைகோவின் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 3 தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளது. அதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி அல்லது சாத்தூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் வழங்கப்படும் எனவும், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.