கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோ, தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான கோபாலை காவல் துறையினர் இன்று காலை கைது செய்தனர். தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின்படி கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து அவரைப் பார்ப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவகத்துக்கு சென்றார். அங்கு கூடியிருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. தான் வழக்கறிஞர் என்றும் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வைகோ கேட்டார். போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். அப்போது மதிமுக தொண்டர்களும் அங்கு கூடினர். அவர்களும் தரையில் அமர்ந்து வைகோவுக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் கூறும்போது, ‘நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி மறுத்து என்னை கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது’ என்றார்