mayilsamy annadurai
mayilsamy annadurai pt
தமிழ்நாடு

உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் மாறும்: மயில்சாமி அண்ணாதுரை

யுவபுருஷ்

செய்தியாளர் - சுரேஷ்

திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியா வளர வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு அறிவியல், தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிறது.

குறிப்பாக விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மூலம் பல செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக நிலவில் நீர் இருப்பதை இந்தியாதான் கண்டுபிடித்துள்ளது. அதுதான் மற்ற நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அதேபோல ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்பினால் மட்டும் போதாது, அதை தாண்டி ஒரு சிறப்பான இடமாக குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

உலக அளவில் திருப்பி பார்க்கக் கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கும். இங்கிருந்து குறைவான செலவில், குறைவான எரிபொருள் மூலமாக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப முடியும். குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் ஏவுதளத்திற்கு தேவையான ஏவுகலன்கள், எரிபொருள், உதிரி பாகங்கள் தயாரிப்பு, சிறிய செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் நடைபெறுவதால், மிகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் அனுப்புவதற்கு சிறந்த இடமாக குலசேகரப்பட்டினம் இன்னும் 3 ஆண்டுகளில் சிறப்பாக அமையும்.

அந்த வகையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அதன் அடையாளமாக இன்று குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒரு ராக்கெட் ஏவப்படுகிறது. உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு இடமாக குலசேகரப்பட்டினம் உருவாகும். வளர்ந்து வரும் இந்தியாவினுடைய தொழில்நுட்பத்தை, நம்முடைய தமிழ் மண்ணில் அதுவும் இந்தியாவின் தென்கோடியில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து உலகத்திற்கு காண்பிக்க உள்ளோம் என்பது நமக்கு பெருமை” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.