தமிழ்நாடு

“உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள்” அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து..!

Veeramani

மே தினத்தையொட்டி உழைக்கும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

இ்துதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில், திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், உழைக்கும் தோழர்களின் உரிமைக்காகவும் பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி, மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் எனச் சூளுரைப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள செய்தியில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள மே தின செய்தியில், நாட்டின் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், உரிமைகளுக்காகப் போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் வெளியிட்டிருக்கும் மே தின வாழ்த்தில், சமூக மாற்றத்தின் உயிர் விசையான உழைக்கும் மக்கள் அமைப்பு சார்ந்த உரிமைப் போராட்ட எழுச்சி நாள் மே முதல் நாள் என்று தெரிவித்துள்ளார்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்:

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் விடுத்துள்ள மே தினச் செய்தியில், எந்தத் துறையைச் சேர்ந்த உழைப்பாளியானாலும் அவர்கள் தேசத்தின் உயிர் நாடிகள் - போற்றப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்ட செய்தியில், உடலை இயந்திரமாக்கி, வியர்வை துளிகளால் உலக வரைபடத்தை வார்த்தெடுக்கும் உழைப்பாளிகளின் உரிமைகள் வெற்றி பெற்ற திருநாள் மே தினம் என்று கூறியுள்ளார்.