தமிழ்நாடு

கழிவு பஞ்சுகளில் மெத்தைகள்: நடவடிக்கை கோரும் பொதுமக்கள்

கழிவு பஞ்சுகளில் மெத்தைகள்: நடவடிக்கை கோரும் பொதுமக்கள்

webteam

நாமக்கல் அருகே தரமற்ற கழிவு பஞ்சுகளைக் கொண்டு மெத்தைகளை தயாரித்து விற்கும் வட மாநில இளைஞர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    
நாமக்கல் வள்ளிபுரம் புறவழிச்சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்திலேயே மெத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலேயே தங்கி கழிவு பஞ்சுகளை கொண்டு தரமற்ற மெத்தைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். நூற்பாலை, விசைத்தறி கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் எரிக்கப்பட வேண்டிய கழிவு பஞ்சுகளை மிக குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதனை தூளாக்கி குறிப்பிட்ட அளவு பஞ்சுகளை வைத்து மெத்தைகளை தயாரித்து விற்கின்றனர். 

இங்கு தயாரிக்கும் மெத்தைகளை 300 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும், இங்குள்ள சிலர் தினசரி கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும், பொதுமக்களும் குறைந்த விலையில் கிடைப்பதால் வாங்கி கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தாங்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மெத்தைகள் தயாரிப்பதாகவும் இப்பணியில் ஈடுபட்டுள்ள 10 பேர் தினசரி 100 முதல் 150 மெத்தைகள் தயாரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 
    
எரிக்கப்பட வேண்டிய கழிவு பஞ்சுகளை கொண்டு மெத்தைகளை தயாரித்து கிராம புறங்களுக்கு கொண்டு சென்று அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும், இதனை தயாரிக்க 100 ரூபாய் கூட செலவாகாத நிலையில் அதனை அதிக விலைக்கு ஏமாற்றி விற்பதாகவும், கழிவு பஞ்சுகளை கொண்டு தயாரிக்கும் தரமற்ற மெத்தைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் போது பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.