m.subramanian
m.subramanian pt desk
தமிழ்நாடு

“கள்ளச்சாராயம் அருந்திய விவகாரம்: மருத்துவமனைகளில் 66 பேர் அனுமதி” - மா.சுப்பிரமணியன் தகவல்

webteam

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், “டெங்கு, மலேரியா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. டெங்கு, மலேரியா நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1,70,300 டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 2426 பேருக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், டெங்குவால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இறப்பு இல்லை. உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பிற்காக 20,480 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போதிய மருந்துகள், உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.

hospital

கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் விழிப்புணர்வும் இவ்விஷயத்தில் அதிகம் தேவை. கடந்த காலங்களில் இன்ஃபுளுயென்சா காய்ச்சல் பரவி அச்சத்தை ஏற்படுத்தியது. அதனை கட்டுப்படுத்த போதிய காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

தொடர்ந்து தமிழ்நாட்டை உலுக்கி வரும் கள்ளச்சாராயம் சம்பவம் குறித்து பேசுகையில், “கள்ளச்சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், திண்டிவனத்தில் 5 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும், புதுவை தனியார் மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hospital

மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் சிகிச்சைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.