தமிழ்நாடு

திருமணம் செய்து கொள்வதாகப் பல பெண்களிடம் மோசடி : சென்னையில் ஒருவர் கைது..!

webteam

சென்னையில் திருமணம் செய்துகொள்வதாகப் பல பெண்களை ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூரில் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணுடன், திருமணத்திற்குப் பதிவு செய்யும் மெட்ரிமோனி மூலம் வியாசர்பாடியைச் சேர்ந்த அஜ்மல் என்ற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இருவரும் பேசிப் பழகி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அப்போது அப்பெண்ணிடம் இருந்து 15 சவரன் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணத்தை அஜ்மல் பெற்றதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அப்பெண் பணம் மற்றும் நகையைத் திரும்பக் கேட்டுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அஜ்மல் பணம் மற்றும் நகையைக் கேட்டால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து அஜ்மலின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த அப்பெண்ணின் குடும்பத்தார், அவரை காரில் கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரது போனை பரிசோதித்துப் பார்த்ததில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளன.

இதையடுத்து அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அஜ்மலை கைது செய்து விசாரித்ததில், இதேபோன்று பல பெண்களை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கிடையே அஜ்மலை தாக்கியது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.