இளைஞர் சதீஷ்குமாரின் மரணத்தில் தனக்கு எந்தவிதமான தொடர்பில்லை என்று கூறியுள்ள பாராலிம்பிக் வீரர் மாரியப்பன், இச்சம்பவத்தை வைத்து சதீஷ் குடும்பத்தினர் பணம் பறிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், குடிபோதையில் வந்த தன்னுடைய கார் மீது சதீஷ் மோதி தகராறில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக அவரது பெற்றோரிடம் புகார் தெரிவித்து விட்டதாகக் கூறினார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பில்லை என்று கூறிய மாரியப்பன், இந்த விவகாரத்தை பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் பணம் பறிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார். சேலம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியில் , காணாமல் போனதாக தேடப்பட்ட சதீஷ்குமார் என்ற இளைஞர் ரயில்வே பாதை அருகே சடலமாக மீட்கப்பட்டார். பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் மிரட்டியதாக சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சதீஷின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உறவினர்கள் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சதீஷின் உடலை வாங்கிக் கொள்ள ஒப்புக்கொண்டனர்.