தமிழ்நாடு

டிசம்பர் 14 இல் மெரினா திறப்பு: புதிய தளர்வுகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி!

jagadeesh

டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் மெரினா கடற்கரை மக்களின் பயன்பட்டிற்கு வரவில்லை. மக்கள் கூட்டம் அதிகமானால் நோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என அஞ்சி மெரினாவிற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது மெரினாவிற்கு மக்கள் செல்ல தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தளர்வுகளுடன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் 200 பேர் பங்கேற்கக் கூடிய மத, சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இபாஸ் கட்டாய நடைமுறை தொடரும் எனவும் முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 7 முதல் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.