ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரை ஸ்தம்பித்துள்ளது.
காணும் பொங்கலுக்கும் புது வருடக் கொண்டாட்டத்திற்கும் கூடிய கூட்டத்தை விட இந்தப் போராட்டத்திற்கு அதிகமாக மெரினாவில் கூடியுள்ளது.நேற்று காலை முதல் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரினாவில் குவிந்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன், பலர் குடும்பத்துடனும் மெரினாவில் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதராவான முழக்கங்கங்களை எழுப்பி வருகின்றனர்.
விவேகானந்தர் இல்லத்தை மையமாகக் கொண்டு சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு குவிந்துள்ள போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.