தமிழகத்திலேயே அதிக அளவில் மனிதர்கள் நீர் மூழ்கி இறக்கும் கடற்கரை பகுதியாக மெரினா உள்ளது.
தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகளில் நீரில் மூழ்கி பலியாகும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படும் பகுதியாக இருப்பது மெரினா தான் என்பது தெரியவந்துள்ளது. சென்னையின் முக்கிய இடங்களுள் ஒன்றாக திகழ்கிறது மெரினா. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்காக இருக்கும். ஆனால் இந்த மெரினா தான் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக மனிதர்களை விழுங்கியுள்ளது. அதாவது அதிகப் பேர் மெரினாவில் மூழ்கிதான் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு 40 பேரும், 2017ல் 19 பேரும், நடப்பு ஆண்டில் இதுவரை 5 பேரும் மெரினாவில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாபலிபுரம் உள்ளது. இங்கு கடந்த 2016ல் 14 பேரும், 2017ல் 16 பேரும், நடப்பு ஆண்டில் இதுவரை 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக கடலோரக்காவல் படை அதிகாரி ஒருவர் கூறிய போது, “சென்னை தவிர்த்து பார்த்தால், கடலூர், வேதாரண்யம், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய கடல் பகுதிகள் ஆபத்தானவையாக உள்ளன. ஆபத்தான பகுதிகள் கடலோரக்காவல் படையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 படகுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 19 மோட்டார் படகுகள் வரவுள்ளன. மெரினாவில் உயர்கோபுரங்கள் 7 அமைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். யாரேணும் கடல் பகுதியிலோ அல்லது கடற்கரை பகுதியிலோ ஆபத்தான நிலையில் இருந்தால், 1093 என்ற சேவை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டில் மட்டும் 261 பேரை நாங்கள் மீட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கடற்கரைப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை :
கடற்கரைப்பகுதி 2016 2017 2018
சென்னை (மெரினா) 40 19 5
மகாபலிபுரம் 14 16 3
விழுப்புரம் 9 9 -
கடலூர் 5 3 1
நாகப்பட்டினம் 16 12 -
வேதாரண்யம் 4 7 -
முத்துபேட்டை - 2 -
ராமேஸ்வரம் 19 20 -
கன்னியாகுமரி 1 19 2
(தகவல்கள்: தி இந்து ஆங்கிலம்)