கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. எனவே மாவோயிஸ்ட்கள் இருப்பது உறுதி என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் சைலண்ட் வேலி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் முகாம் அமைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அங்குள்ள மரங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தமிழக கேரள எல்லைப்பகுதியான இங்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2 உயர் ரக கேமராக்களைக் காணவில்லை என ரோந்து சென்ற வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகலி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்டதை அடுத்து, சைலண்ட் வேலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.