தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகளால் பல லட்சம் ரூபாய் ஆடு வர்த்தகம் பாதிப்பு

webteam

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் ரொக்க பணத்தை கையாள முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சமயபுரம் அருகேயுள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வாரச் சந்தை உள்ளது. அங்கு பிரதி சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் வாரச்சந்தையில் சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.1.30 கோடி வரை பணபறிமாற்றம் நடைப்பெறும். அந்த 3 மணி நேரத்தில் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலான ஆடுகள் இந்த சந்தையில் விற்பனையாகும்.

இந்த ஆட்டு சந்தையில் ஆடு ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையில் விற்பனை ஆகும். மேலும் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் வியபாரிகள், சுமார் 50 ஆடுகள் முதல் 75 ஆடுகள் வரை விலைக்கு வாங்கின்றனர். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர் போன்ற பிற  மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். 

இந்த ஆடுகளை விலைக்கு வாங்க குறைந்த பட்சமாக சுமார் ரூ 1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 3 லட்சம் வரையிலான ரொக்கம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ. 50 ஆயித்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லப்பட்டால் உரிய அவணங்கள் இல்லாமல் இருப்பதாக கூறி அந்த பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள கருவூலத்தில் உதவி தேர்தல் அலுவலரால் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் தற்போது இந்த சந்தை வியபாரம் பாதிப்புகுள்ளாகியுள்ளது.  

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தனது குடும்ப செலவினங்களுக்காக விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகி வருகிறது.அது போல ஆடுகளை வாங்க வரும் வியபாரிகளும் பணத்தினை எடுத்து வர முடியத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த வாரச் சந்தையில் வழக்கத்தினை காட்டிலும் விற்பனை குறைந்ததால் பல லட்சம் ரூபாய் வியபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.