தமிழ்நாடு

வீடு வாடகை ரூ.250; மின் கட்டணம் ரூ.6,000-குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

JustinDurai
சேலம் அருகே குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பல வீடுகளுக்கு மின் கட்டணம் ரூபாய் 6,000 வரை கணக்கிடப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தங்களுக்கு வீட்டு வாடகையை காட்டிலும் மின் கட்டணம் பல மடங்கு அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளதால் குழப்பத்தில் குமுறுகின்றனர்.
சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் மொத்தம் 840 வீடுகள் உள்ளன. இங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீட்டிற்கு மாத வாடகை ரூ.250 செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பல வீடுகளுக்கு கடந்த இரண்டு மாதமாக மின் கட்டணம் ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரை கணக்கீடு செய்யப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சிறிய அளவிலான வீடுகளில் ஒரு மின் விளக்கு, ஒரு மின் விசிறி, ஒரு தொலைக்காட்சி மட்டுமே இங்குள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில வீடுகளில் மட்டுமே மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் உள்ளன. இப்படி அதிகபட்ச மின் உபயோகிப்பை பயன்படுத்தாத தங்களுக்கு அதீத மின் கட்டணம் வந்தது எப்படி என புலம்பித் தவிக்கின்றனர் குடியிருப்பு வாசிகள். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
இங்கு வசிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வெறும் 8,000 மட்டுமே சம்பளமாக பெறக்கூடிய நிலையில், கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இச்சூழலில், இந்தளவு மின்கட்டணம் தங்கள் வருமானத்தில் பேரிடியாக விழுந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர் இவர்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலத்தாம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.